அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது
Sunday, December 25, 2011
நன்றி-தமிழ்மரபு
திரு வீ. க
எவன் ஒருவன் தான் வாழ்ந்த காலத்தில் தன்னலம் கருதாது தன் மொழியை, தன் மக்களை, தன் கலையை அல்லது தன் கலாச்சாரத்தை தன் தோளிலேற்றிச் சற்றாவது உயர்த்துகிறானோ அல்லது உயர்த்த உண்மையிலேயே எத்தனிக்கின்றானோ, அவன் வாழ்க்கை வரலாறு ஆகிறது. அத்தகைய வரலாறு படைத்த இப்பெரியோர்கள் தமிழகத்தில் அதிகம் கற்றோராலேயே கூடப் பெரிதும் பேசப்படாதிருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு., தமிழர்களின் வெட்கக்கேடு. பகட்டுக்கும், பசப்பிற்கும், பாசாங்கிற்கும் தமிழன் பறிபோவதும், பலியாவதும் அவன் தலையெழுத்தோ என்று கூட சில சமயம் எண்ணத் தோன்றுகிறது.
வங்காளத்தில் தாகூரைப் பற்றித் தெரியாதவர்கள், கேரளத்தில் வள்ளத்தோளை அறியாதவர்கள் மிகக் குறைவானவர்களே. ஆனால், தமிழகத்தில் பாரதியைப் பற்றி சரியாக அறியாதவர்கள், அவர் பாடல்களில் ஒன்றைக் கூட முழுதும் படிக்காதவர்கள் அதிகம்! திருவள்ளுவரைப் பற்றி சரியாகத் தெரியாதவர்கள், ஒரு திருக்குறளாவது முழுமையாகத் தெரியாதவர்கள் மிக அதிகம்! நான் சொல்வது மெத்தப் படித்தவர்களையும் சேர்த்துத்தான்! இந்நிலையில், இந்தப் பட்டியலிலேக் காணப்படும் தமிழ்ப் பெரியோர்கள் பெரும்பாலோர் அதிகம் அறியப்படாமல் அல்லது பேசப்படாமல் இருப்பதில் என்ன வியப்பு இருக்கமுடியும்?
ஆனால், பட்டியலில் காணப்படும் இந்தப் பெரியோர்கள் எல்லோரும் மாரியை ஒத்தவர்கள். பயன் கருதாது, தன்னலமின்றி, தன்னைத்தானே வருத்திக்கொண்டு, காரியமே கண்ணாகி இருந்து, தமிழ்த் தொண்டு செய்தவர்கள்; அரும் படைப்புகளைத் தந்தவர்கள். பிற்காலத்திலே நாம் பேசப்படப் போகின்றோம், பாராட்டப்படப் போகின்றோம் என்றெல்லாம் கருதியொன்றும் அவர்கள் தங்கள் செயற்கரிய செயல்களை ஆற்றவில்லை. மூதுரையின்படி நல்லோரைப் பற்றி பேசுவதும், நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று என்று சொல்லலாம். அல்லது, திருக்குறள் வழி நின்று, பெரியோரைத் துணைக்கோடுவதால் ஏற்படக் கூடிய நன்மைகளை பட்டியலிடலாம். ஆனால், உண்மையில் இந்தத் தமிழிப் பெரியோர்களைப் பற்றி அறிந்துகொள்வதால், அவர்கள் ஆற்றியத் தொண்டைப் பற்றியும், அவர்களின் படைப்புகளைப் பற்றியும், அவர்கள் ஆற்றிய செயற்கரிய செயல்களைப் பற்றியும் தெரிந்துகொள்வதால், ஒரு புத்துணர்ச்சியும் ஒரு புதிய எழுச்சியும், நாமும் சாதிக்க வேண்டும், நம்மாலும் சாதிக்கமுடியும் என்ற எண்ணமும் உறுதியும் நம்முள் மிகும். நம்மை நாமே உள்நோக்கிப் பரிசோதித்துக்கொள்ள ஒரு உந்துதல் நமக்குக் கிடைக்கும். நம்மை நாமே உயர்த்திக்கொள்ள ஒரு உத்வேகம் பிறக்கும்..
இந்தப் பெரியோர்களிலும், தனக்கே உரிய தனித்தன்மையும், தனிச் சிறப்பும் உடையப் பெருந்தகைதான் தமிழ்த் தென்றல் திரு.வி.க. இவரும் பாரதியைப்போல் ஒரு பன்முகம் கொண்ட விந்தையாளர். பள்ளியாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், தேசபக்தர், தேசத்தொண்டர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், தொழிற்சங்கத் தலைவர், வணிகக் கணக்காளர், வள்ளலாரைப்போல் சமரச சன்மார்க்கத்தில் ஈடுபாடு உடையவர், இயற்கை உபாசகர், சமூகச் சீர்திருத்தவாதி, பெண்கள் முன்னேற்றத்திற்காக் குரல் கொடுத்து, உழைத்து, சாதித்தும் காட்டியவர். தான் வாழ்ந்த காலத்தில், வசதியின்றி இருந்தாலும், வறுமையிலே உழன்றாலும், தன் புலமைக்காவும், நாவன்மைக்காகவும், தொண்டிற்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டவர்; போற்றப்பட்டவர்.
இவருடைய தனித்தன்மையிலும் ஒரு தனிச் சிறப்பென்னவென்றால், தமிழ் உரைநடைப் பாங்கில், மொழிநடையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்பதாகும். தமிழ் மொழியில் உரைநடைப் பாங்கை, வெகு எளிதாக, மிகச் சரியாக திரு.வி.க-விற்கு முன், திரு.வி.க-விற்குப் பின் என்று நாம் பிரித்துவிடலாம். அயல்மொழிகளின் நெடி வீச, நெடிய சொற்றொடர்களில், கடினமான, புரியாத, பண்டிதச் சொற்களைக் கொண்டு, உரைநடை எழுதப்பட்டு வந்தபோது, எளிய, இனிய தமிழ்ச் சொற்களைக்கொண்டு, சிறு சிறு சொற்றொடர்களை உருவாக்கி, அரிய பெரியக் கருத்துக்களை அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எழுதிக் காட்டியவர் திரு.வி.க. பாரதியைப் பற்றிப் பேசும்போது, கவிதையைத் தேனாய், பாலாய், பாகாய், அமுதாய்க் கருதி வந்தக் காலத்தில், அதை மனிதனின் அன்றாட, அடிப்படைத் தேவையான குடிநீராய் ஆக்கியவன் என்று சொல்வார்கள். அதுபோலவே, திரு.வி.க தமிழ் உரைநடையைத் தூய, தெளிந்த, குளிர்ந்த, சுவையான குடிநீராய் ஆக்கிக் காட்டியவர் என்பது ஒரு பேருண்மை. தமிழ் மணம் கமழ அவர் உருவாக்கியச் சொற்றொடர்கள், குறியீடுகள், பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் மொழிநடை பத்திரிக்கைத் துறையிலும், மற்ற துறைகளிலும் பின்பு பலராலும் பின்பற்றப்பட்டது. கண்ணதாசன், கல்கி போன்றவர்கள் 'திரு.வி.க-வின் உரைநடைப் பாங்கை அப்படியே நாங்கள் பின்பற்றினோம்,' என்று அவர்களே குறிப்பிட்டிருக்கின்றனர்.
எழுத்தாளர் வ.ரா. எழுதினார்: 'தூய தமிழின் இன்னிசை ஒலியைக் கேட்டு ரசிக்கும் எண்ணம் கொண்டவர்கள், திரு.வி.க நடத்தி வந்த 'தேசபக்தன்' இதழின் பழைய படிகளைக் கண்டெடுத்துப் படிப்பார்களேயானால், மனப்பூரிப்பு அடைவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தமிழில் உரைநடையில் ஒலியழகு, பொருளழகு, வர்ணனை அழகு உண்டோ என்பவர்கள் அவரின் எழுத்தைப் படித்தால் தெளிவார்கள்.'
திரு.வி.க சென்னையை அடுத்த, போரூருக்கு அருகிலுள்ள துள்ளம் என்ற சிற்றூரில் 1883-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 26-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விருத்தாசலம்; தாயார் பெயர் சின்னம்மாள். கல்யாணசுந்தரம் என்று பெற்றோர்களால் பெயரிடப்பட்டார். மூதாதையர்களின் ஊரான திருவாரூரின் நினைவாக 'திருவாரூர்' அவர் பெயரில் இணைக்கப்பட்டது. எனவே, அவர் முழுப் பெயர் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரம். சுருக்கமாக, 'திரு.வி.க.' அவர் பெயரில் வந்து ஒட்டிக்கொண்ட 'திரு' ஒரு அடைமொழியோ, விளிமொழியோ அல்லது அணிமொழியோ அல்ல. அது ஒரு வெறும் அடையாளமொழிதான். இருப்பினும், அவரிடம் இயற்கையிலே அமைந்திருந்தப் பேரறிவு என்னும் திருவாலும், அதைவிட மேலாக அவரிடமிருந்த மனிதநேயம் என்னும் பெரும் திருவாலும் அவர் பெயரில் வந்து ஒட்டிக்கொண்ட 'திரு' திருவடைந்தது., பெருமைக்குரியதாகியது. திருவள்ளுவரைப்போல!
திண்ணைப் பாடமாக ஆரம்பக் கல்வியை தன் தந்தையிடமே கற்றார். கற்றது அரிச்சுவடி முதல் ஓரளவு ஆங்கிலம்வரை. பின்பு, சென்னை இராயப்பேட்டை ஆரியன் பிரைமரி பள்ளியில் இரண்டாம் வகுப்புத் தொடங்கி, வெஸ்லி கல்விச்சாலையில் நான்காம் படிவம் வரைப் படித்தார். படிப்பில் முதல் மாணாக்கனாக விளங்கினார். பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி முதலியவற்றில் கலந்துகொண்டு முதல் பரிசும் பெற்றார். உடல் பருமன் குறைய உட்கொண்ட ஒரு நாட்டு மருந்து, பத்திய முறிவின் காரணமாக ஒத்துக்கொள்ளாமல் போய், முடக்கு நோய்க்கு ஆளாகினார். அதனால், பள்ளிப் படிப்பு பாதியில் கெட்டது. புகழ் பெற்ற அயோத்திதாசப் பண்டிதரிடம் சித்த வைத்தியச் சிகிச்சைப் பெற்று, இரண்டாண்டுகளில் படிப்படியாகக் குணமானார். இதற்கிடையில், குடும்பமும் வறுமைக்கு ஆளானது; பெற்றோரும் நோய் வாய்ப்பட்டனர்.
நான்காண்டு இடைவெளிக்குப் பின் உடல் தேறிய திரு.வி.க மீண்டும் வெஸ்லி பள்ளியில் நான்காம் படிவத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். தன் அறிவாலும் திறமையாலும் மீண்டும் படிப்பில் முதல் மாணாக்கனாக விளங்கினார். அவர் ஐந்தாம் படிவம் படிக்கும்போது அவரின் தமிழாசிரியாரக இருந்தவர் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நா. கதிரைவேல் பிள்ளை. பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது, திரு.வி.க-விற்கு ஏனோ படிப்பில் ஆர்வம் குன்றத் தொடங்கியது. மேலும், ஒரு தேர்வு நாளன்று, தான் பெருமதிப்பு வைத்திருந்த கதிரைவேல் பிள்ளைமேல் தொடரப்பட்ட ஒரு வழக்கில் சான்று கூறச் சென்றதால், தேர்வு எழுதமுடியாமல் போய், படிப்பில் முதல் மாணாக்கனாக விளங்கிய திரு.வி.க, பள்ளி இறுதித் தேர்வில் தோல்வியுற்றார். அதனால் மனம் விரக்தி அடைந்து, சிலகாலம் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தார். பின், உறவினர் ஒருவரின் வற்புறுத்தலால், வணிகப் பள்ளியில் சேர்ந்து, வணிகக் கணக்கியல் பயின்று தேறினார்.
ஆரம்பத்தில் தன் தந்தையிடமும் அதன்பின் கதிரைவேல் பிள்ளையிடமும் தமிழ் கற்ற திரு.வி.க, பின்பு சுவாமிநாத பண்டிதர், மயிலை மகாவித்துவான் தணிகாசலம், சிதம்பர முதலியார் போன்றோரிடம் திருமறைகள், நீதி நூல்கள், ஞான நூல்கள், இலக்கணம், இலக்கியங்கள் ஆகியவற்றைக் கசடறக் கற்றார். அயோத்தி தாசரிடமிருந்து பெளத்தக் கல்வியையும் கற்றார். எல்லா ஆசிரியர்களுமே அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்த அறிவையும் திறமையையும் கண்டு வியந்தனர்; மதித்தனர். ஓவியத்திலும் இசையிலும் கூட அவருக்கு ஆர்வம் இருந்தது. அக்கலைகளைப் பற்றிய ஆய்ந்த, நுட்பமானக் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் அளவிற்கு அந்த ஆர்வம் அவரிடமிருந்தது. இயற்கை அழகை ஆராதிக்கின்ற மனப்பாங்கு அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்தது.
இடையில் குடும்பத்தில் ஏற்பட்டப் பொருளாதார நெருக்கடியினால், சென்னை ஸ்பென்சர் நிறுவனத்தில் அட்டவணைப் பிரிவில் திரு.வி.க பணியில் அமர்ந்தார். ஓய்வு நேரங்களில் படிக்கவும் எழுதவும் செய்தார். அப்போது அவருக்கு நாட்டின் விடுதலைப் போரில், அதன் ஒரு அங்கமான சுதேசி இயக்கத்தில் ஆர்வம் பிறந்து மிகுந்தது. சென்னைக் கடற்கரையில் விபின்சந்திரபாலர் ஆற்றிய, மிகவும் புகழ்பெற்ற சொற்பொழிவு அவரை மிகவும் உலுக்கியது. கல்கத்தாவிலிருந்து அரவிந்தரின் 'வந்தேமாதரம்' பத்திரிக்கையை வரவழைத்து, தானும் படித்து, தான் படித்த விடுதலை இயக்கச் செய்திகளை எல்லாம் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கும் அவர் எடுத்துச் சொல்லி வந்தார். இதைக் கண்டு எரிச்சலுற்ற ஆங்கிலேயருக்குச் சொந்தமான ஸ்பென்சர் நிறுவனத்தின் நிர்வாகம், அவரைக் கூப்பிட்டு எச்சரித்தது. அதனால் வெகுண்டு, தன் பணியைத் துறந்து வெளியேறினார். பின்னர், தன் தமையனாருடன் சேர்ந்து ஒரு அச்சுக்கூடத்தைத் துவக்கினார். அங்கேதான் முதலில் 'திருமந்திரம்' பதிப்பிக்கப்பட்டது. அதன்பின், அவரின் சிறப்புக் குறிப்புகளுடன் 'பெரியபுராண'மும் அங்கே வெளியிடப்பட்டது. இருப்பினும், ஏற்பட்டப் பொருள் இழப்பினால், இரண்டு ஆண்டுகளில் அந்த அச்சுக்கூடம் மூடப்பட்டது.
பின்னர், தான் படித்த வெஸ்லியன் பள்ளியிலேயே ஆறாம் வகுப்பு ஆசிரியராக திரு.வி.க பணியில் சேர்ந்தார். அப்போது அப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணிபுரிந்த ஜான் இரத்தினம் மிகுந்த தமிழ் ஆர்வம் உள்ளவராக இருந்தார். திரு.வி.க-வின் தமிழ்ப் புலமையைக் கண்டு வியந்து, தலைமையாசிரியர் அவரை வெகுவாக ஆதரித்தார். திரு.வி.க-வின் வருவாயைக் கூட்டும் பொருட்டே, 'வெஸ்லியன் தொழிற்பயிற்சி நிலையம்' என்று ஒன்றைத் தொடங்கி, அதில் திரு.வி.க-வை வணிகக் கணக்கியல் கற்பிக்கும் பகுதிநேர ஆசிரியாராகவும் பணியமர்த்தினார். இந்த ஜான் இரத்தினத்தின் மூலம்தான் திரு.வி.க கிறித்துவ மதத்தின் நுட்பமான கோட்பாடுகளை எல்லாம் கேட்டறிந்தார். சிறிது காலத்திற்குப்பின், தன் தகுதியால் திரு.வி.க பள்ளியின் தலைமைத் தமிழாசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். திருமனமே வேண்டாமென்றிருந்த திரு.வி.க-வை, திருமணத்திற்கு ஒப்புகொள்ள வைத்தவரும் இந்த ஜான் இரத்தினமே. பள்ளியில் தமிழ்ச் சங்கம் நிறுவி, சக ஆசிரியர்களின் ஊதிய மேம்பாட்டிற்கும் வசதிக்கும் உழைத்து, தன் பணியில் மிகவும் பரிமளித்த திரு.வி.க, ஒன்றைரை ஆண்டுகாலமே பள்ளிப் பணியில் இருந்தார்.
1912-ஆம் ஆண்டு, கமலாம்பிகை என்ற மாதரசியை மனைவியாகப் பெற்றார். தன் கணவனிடம் அந்தப் பெண் கேட்டது பொன்னும், மணியும், புடவையும், அழகு சாதனங்களும் அல்ல. கல்வியை மட்டுமே அவரிடம் கேட்டார். திரு.வி.க-வும் தன் மனைவிக்கு கல்வியையும் காப்பியங்களையும் கற்பித்து வந்தார். அவர்களின் இனிய திருமண வாழ்வின் அடையாளமாக, அவர்களுக்கு ஒர் ஆண் மகவு பிறந்து சில நாட்களிலும், பிறகு ஒரு பெண்பிள்ளை பிறந்து ஒராண்டிலும் இறந்தனர். 1918-ல் அவர் மனைவி எலும்புருக்கி நோய்க்கு ஆளாகி எமனுக்கு இரையானார். ஆறு ஆண்டுகளில், திரு.வி.க-வின் இல்வாழ்க்கை தொடங்கி முற்றும் முடிந்துவிட்டது. சுற்றமும் நட்பும் மிகவும் வற்புறுத்தியும், மறுமணம் செய்துகொள்ள திரு.வி.க மிகத் திண்ணமாக மறுத்துவிட்டார்.
மனைவியின் மறைவிற்குப் பிறகு, தான் பார்த்துவந்த தலைமைத் தமிழாசிரியர் பணியைத் துறந்து, பொதுத் தொண்டில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கினார் திரு.வி.க. தன்மீது பெருத்த அன்பு வைத்திருந்த, குறுகிய காலத்திலேயே தன்னைப் பலவகையிலும் பண்படுத்திய தன் மனைவியின் நினைவாக, பெண்ணின் பெருமை இவ்வுலகில் நன்கு விளங்கப் பாடுபடுவதென உறுதிபூண்டு செயலாற்றினார்.
அப்பொழுது திலகரும், அன்னிபெசண்ட் அம்மையாரும் ஒன்றுபட்டு நடத்திவந்த தன்னாட்சிக் கிளர்ச்சி அறப்போர் திரு.வி.க-வை வெகுவாக ஈர்த்தது. அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய 'New India' நாளிதழின் துணையாசிரியராக இருந்த சுப்பராய காமத் என்பவர் திரு.வி.க-வின் நெருங்கிய நண்பர். சுப்பராய காமத்தின் முயற்சியினால் தொடங்கப்பெற்ற 'தேசபக்தன்' நாளிதழில், திரு.வி.க ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினர். தமிழிப் பத்திரிக்கைத் துறையில் ஒரு புதிய, ஒளி வீசும், தெளிவான, சுவையான, எளிதில் புரியும் உரைநடை வழக்கு பிறந்தது. பரலி.சு.நெல்லையப்பர், வெ.சாமிநாத சர்மா போன்றோர் அவரிடம் இந்தப் பத்திரிக்கையில் உதவியாசிரியர்களாகப் பணிபுரிந்தனர். ஆங்கிலேய ஆட்சியின் மீதும், அதிகார வர்க்கத்தின் மீதும் அனல் கக்கும் கருத்துக்களை, தேசபக்தியைத் தூண்டும் சிந்தனைகளை, தேசத் தலைவர்களின் எழுச்சி மிக்கப் பேச்சுக்களை எல்லாம் திரு.வி.க இந்தப் பத்திரிக்கையில் தனக்கேயுரிய, புத்தொளி வீசும், அழகியத் தமிழ்நடையில் எழுதினார். பின்னர், இதழின் உரிமையாளர் மாற, இதழின் அச்சுக்கூடம் அவருக்குத் தெரியாமல் அடமானம் வைக்கப்பட, மனம் வெறுப்படைந்த திரு.வி.க, இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் பத்திரிக்கைப் பொறுப்பைத் துறந்து, அதிலிருந்து வெளியேறினார். பின்னர், வ.வே.சு. ஐயரை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்துகொண்டிருந்த 'தேசபக்தன்' நாளிதழ், பின் வாரயிதழாக மாறி, அதன்பின் அடியோடு மறைந்தது.
திரு.வி.க-விடம் மிகவும் அன்பு பூண்டிருந்த ஒருசில தொழிலாளத் தோழர்கள் தாமாகவே முன்வந்து அளித்தப் பொருளுதவியைக் கொண்டு, 1920-இல் அவரால் ஒரு அச்சுக்கூடம் வாங்கப்பட்டது. அந்த அச்சுக்கூடத்திலிருந்து, புகழ்பெற்ற 'நவசக்தி' வார இதழ் திரு.வி.க-வை ஆசிரியராகக்கொண்டு வெளிவரத் தொடங்கியது. அவ்விதழில், அரசியல் மட்டுமின்றி, பெண்கள் நலன், சமூகச்சீர்திருத்தம், மொழிச் சிறப்பு, கலையாக்கம், சன்மார்க்க நெறிகலந்த சமதர்மம் எனப் பொதுப்பகுதிகளும் இடம் பெற்றன. வன்மைக்கும், மென்மைக்கும் உள்ள வேற்றுமையே, தேசபக்தன் நாளிதழுக்கும், நவசக்தி வார இதழுக்கும் இருந்தது. இதழ் அடைந்த புகழாலும், பெற்ற வரவேற்பாலும், ஈ.வெ.ரா. பெரியாரின் ஆலோசனை மற்றும் நிதியுதவியாலும், வாரப்பதிப்பாக வந்துகொண்டிருந்த நவசக்தி, கூடுதலாக மாதம் மும்முறைப் பதிப்பாகவும் 1923-ல் வரத்தொடங்கியது.
கல்கி நவசக்தியில் அப்பொழுது துணையாசிரியராகப் பணிபுரிந்து வந்தார். திரு.வி.க விடம் மிகுந்த பக்தியும், பேரன்பும் பூண்டிருந்தார். திரு.வி.க-வும் கல்கியிடம் பேரன்பு கொண்டிருந்தார். கல்கியைப் பற்றி தன் நூல்களில் குறிப்பிடும் போதெல்லாம், 'தம்பி' என்றே அன்போடு விளித்து திரு.வி.க குறிப்பிடுகின்றார். 1939-ல் அறிவிக்கப்பட்ட போர்கால அவசரச் சட்டங்களினால், பல பத்திரிக்கைகள் முடக்கப்பட்டன. நவசக்தியும் அம்முடக்கலுக்கு ஆளாகியது. 1941-ல் தான் பார்த்துவந்த ஆசிரியர் பொறுப்பை மற்றொருவரிடம் விட்டுவிட்டு, பத்திரிக்கையை விட்டு விலகி, திரு.வி.க, முழுநேர சமரச சன்மார்க்கத் தொண்டில் ஈடுபடத் தொடங்கினார். தேசப்பக்தியைத் தூண்டுவதற்கு பாரதிக்கு இருந்தது அவரின் கவிதையும் பாட்டும். நம் திரு.வி.க-விற்கு இருந்ததோ, அவருடைய தெளிந்த, எளிய, அழகிய, எழுச்சியூட்டும் உரைநடை.
நாட்டுப்பற்று மிக்கவரான திரு.வி.க, தேசீய அரசியலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். காந்தியடிகளைச் சந்தித்து அவருடன் பழகியிருக்கிறார். காந்தியடிகளின் வேண்டுகோளின்படி, அவருடைய ஆங்கில உரைகள் சிலவற்றை தமிழில் திரு.வி.க மொழி பெயர்த்திருக்கிறார். திலகரைச் சந்த்தித்து அவருடனும் பழகியிருக்கிறார். பாரதியின் சமகாலத்தவர், ஆதலால் அவருடனும் பழகி, அவருடைய பாடல்களுக்கு ஒரு பெரிய ரசிகராக இருந்திருக்கிறார். வ.உ.சி, ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி முதலியோரின் நண்பராய் இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் உறுப்பினாரய் இருந்து, பல கூட்டங்களக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்திருக்கிறார். இருப்பினும், மனிதநேயமும் மக்கள் நலனனும் அவரின் அரசியல் கொள்கைகளாக இருந்திருக்கின்றன. அவர் கூறினார்: 'நான் சாதி, மத, நிற, மொழி, நாடு முதலிய வேறுபாடுகளைக் கடந்தவன். பொதுமக்களின் சுகவாழ்வு மட்டுமே எனது குறிக்கோள். என்னுடைய அரசியலும் அதுவே. யார் என் கருத்துக்கு, நோக்கத்திற்கு உடன்படுகிறார்களோ அவர் கட்சியே என் கட்சி.' திரு.வி.க-வின் இத்தகைய அணுகுமுறைதான் எதிர்த்தரப்பிலிருந்த, மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற அறிஞர் அண்ணா அவர்களை மிகவும் கவர்ந்தது. 'அரசியலில் புயலாகவும், தமிழில் தென்றலாகவும் இருப்பவர் நம் திரு.வி.க. நூல்களிலே நுண்ணிய உரைகளை அழகிய தமிழில் தீட்டியவர் நம் திரு.வி.க,' என்று அறிஞர் அண்ணா உரிமையுடனும், பெருமையுடனும், பெருமிதத்துடனும் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்நியரின் பிடியிலிருந்து தன் தாய் நாட்டையும், அந்நியமொழிகளின் ஆதிக்கத்திலிருந்து தன் தாய்மொழியையும் விடுவிக்கத் தொடர்ந்து போராடிய இப்பெருந்தகையின் ஊனுடம்பு 1953-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள் மண்ணுலகைவிட்டு மறைந்தது. அவர் சுவாசித்தக் காற்று அன்று நின்றது. ஆனாலும், அவரிடமிருந்துப் பிறந்து, சுகமாக வீசிவந்த தென்றல் நின்றுவிடவில்லை. தொடர்ந்து இன்றும் வீசிவருகிறது - மற்ற காற்றலைகளுக்கு எப்படி வீசுவது, எப்படி வருடுவது, எப்படித் தீண்டுவது என்று நாளும் கற்றுத் தந்தபடியே!
1983-ஆம் ஆண்டு அவருடைய நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் மிகச் சிறப்பாக தமிழ்நாடு அரசாலும் மற்ற தமிழ் அமைப்புகளாலும் கொண்டாடப்பட்டது. கட்டிடங்களுக்கும், பாலங்களுக்கும், நகர்களுக்கும், பூங்காக்களுக்கும் அவர் பெயர் வைக்கப்பட்டது. அதன்பின் வழக்கம் போல் எல்லாம் மறக்கப்பட்டன. நினைப்பதும் ஏத்துவதும், விழாவோடு விடைபெற்றன.
திரு.வி.க ஒரு தலைசிறந்த மேடைப் பேச்சாளர். மடைதிறந்த வெள்ளமென, உணர்ச்சியும், எழுச்சியும் எழுப்பும், கருத்தாழமுள்ள பல உரைகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். அரசியல், சமயம், சமூகம் என்ற பல்வேறு தலைப்புகளில், பல இடங்களில் அவர் நிகழ்த்திய உரைகள் அவை. கட்டிப்போடுகின்ற பேச்சாற்றல் கொண்டவர் அவர். கேட்பாரைப் பிணிக்கும் தன்மையுடன், கேளாரையும் கேட்க விரும்ப வைக்கும் வகையினதாய், மாற்றாரையும் மயக்கி தன்வசம் ஈர்க்கும் வண்ணம் அமைந்தவை அவருடைய மேடைப் பேச்சுக்கள். அவருள் சுடர்விட்டுத் திகழ்ந்த உண்மை, நேர்மை, ஒழுக்கம், நியாயம், தியாகம், கனிவு, பனிவு, துணிவு அவருடைய எழுத்துக்கும் பேச்சுக்கும் ஓளியும் உறமும் அளித்தன. அந்தக் காலத்தில் மேடைப் பேச்சில் ஒரு சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த அறிஞர் அண்ணாவையே மிகவும் கவர்ந்தப் பேச்சாளர் திரு.வி.க என்றால், அவருடையப் பேச்சாற்றலுக்கு வேறு என்ன சான்று வேண்டும்?
மொழிக் காவலராகவும் விளங்கிய அவர், 'தாய்மொழியின் வாழ்விழந்தால் தரைமோதி மாய்தல் நலம், போய்க் கடலில் விழுதல் நலம், பொலிதருமோ உடலுயிரே' என்று பொங்கி முழங்கிய அவர், தாய்மொழி வழிக் கல்வியையும், தமிழர்கள் பல மொழிகளைப் பயில வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வந்திருக்கின்றார். உலகில் பல மொழிகளில் இருக்கின்ற அறிவியல் மற்றும் கலைச்சொற்களைத் தமிழில் மொழிபெயர்த்தாலே அது தமிழுக்குச் செய்கின்ற பெரும் தொண்டாக இருக்கும் என்றும் அவர் கருதினார். தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலை, இலக்கியங்களை உலகம் முழுவதும் பரப்புதல் வேண்டும் என்பது அவரின் அவாவாக இருந்தது. சென்ற நூற்றாண்டில், தமிழ் மொழி வாழ, வளம் பெற உழைத்தவர்களில் திரு.வி.க-விற்கு என்று ஒரு தனியிடம் எப்போதும் உண்டு.
வாழ்க்கை வரலாறு, உரை நூல்கள், அரசியல் நூல்கள், சமய நூல்கள், சமயப் பாடல்கள் என்று 56 நூல்களை நம் திரு.வி.க படைத்துள்ளார.
பங்களிப்பாளர்கள்
Friday, December 9, 2011
Sunday, December 4, 2011
வாசித்த இன்பம்
தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலைவெறி தங்லீஸ் பாட்டு உலகை பிடித்து ஆட்டிவரும் வேளையில் அதன்மீது Insult to Sensibilities என்ற விமர்சனமும் வந்துள்ளது. தமிழ் பெண்பாற் கவிஞர்களின் தேர்வு அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதை அறிமுகப்படுத்தி வெங்கட் சாமினாதன் எழுதிய கட்டுரை வந்துள்ளது. சில கவிதை வரிகள்
கீசுகீ சென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
அதே இனிய நடையில் ஆங்கிலத்தில்..
Black sparrows in droves
Fill the air with ‘keech keech’ chirps
Don’t you hear it, stupid girl?
”………………………………………………………………
செட்டிக்கடை வெட்டி வேரு
சிவகாசிப் பன்னீரு
மதுரைக் கடைச்சக்களத்தி
மறக்கப் பொடிபோட்டா
குதிரைவாலிக் கருது போல
குறிச்ச பொண்ணு நானிருக்கேன்
சரவட்டைக் கருதுக்காக
சாம வழி போகலாமா?…….”
Cuscus grass from Chetty shop
Fragrant Sivakasi pannier
He forgets in the vile spell
Cast by the Madurai slut
Here I am so georgeous
Like lush paddy sheaf
And I’am the girl anointed too;
In search of measely stalk
Should you scurry so far.
சல்மாவின் கவிதை ஒன்று. அதன் முதல் பத்தியும் கடைசிப் பத்தியும்.
தன் வழி தவறி
அறைக்குள் சிக்கிய
பட்டாம்பூச்சி துவக்கிற்று
தன் தேடலை
……………………
என்றேனும்
கதவு திறந்து வழி கிடைக்குமெனில்
அது பறந்து தான் போகும்
வர்ணங்கள் இல்லையென்றாலும் கூட
Losing its way
Trapped in the room
Starts its search
This butterfly
One day some day
Should door open and way found
Sure it would wing its way out
Though robbed of its hues.
இதே போல திலக பாமா கவிதை ஒன்றின் ஆரம்பமும் இடையில் ஒன்றும்..
நினைவுப் பரணிலிருந்து எழுப்ப முடியவில்லை
தூசிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும்
வார்த்தைகளை
………………
மூடிய இமைகளுக்குள்
உலவும் இருளுக்கு
வெள்ளைக் காகிதங்களின் குணம்
கவிகதைகளாய் என்
நினைவுகளைச் சுமந்து
மடி நிரப்பியிருக்கிறது……
Words
Buried in a pool of dust
I can’t retrieve from the memory’s loft
The inky darkness
Encased in shut eyelids
Assumes
White paper’s aspect
Films my madi
As poems
Carrying my memories
உமா மகேஸ்வரியின்
வெளிவாசல் வழியே
சலித்த மதியம்
சாக்கடை நீரருந்தும் குருவி
உதிர்கிற மென்மையும்
உடைபடாக் கடினமும்
விசித்திரமாய் முடைந்த மௌனம்
The noon
Filtered through the front door
A sparrow drinking gutter water
A silence
A strange weave of
Softly enveloping tenderness
And unrelenting hardness.
Subscribe to:
Posts (Atom)