NFTE-தமிழ்மாநிலமேதினசெய்தி
மேதினம் உலக முழுவதிலும் உள்ள தொழிலாளர்களின் சகோதரத்துவ தினம். வீடும் நாடும் தாண்டி உறவுப்பாலம் அமைக்கும் தினம்.
உலக முழுவதிலும் மானிட மேம்பாட்டிற்காக நடந்த அத்தனை உரிமைப் போராட்டங்களையும் நாம் சுவீகரிக்கின்றோம். விடுதலைபோர்கள், சுரண்டலை எதிர்த்த தொழிலாளர்களின் போராட்டங்கள் எமக்கு உரமூட்டியுள்ளன.
மானுட ஒற்றுமைக்கு உலைவைக்கும் அனைத்து வகை பேதப்படுத்தலையும் வர்க்க ஒற்றுமை பார்வையில் நிராகரிப்போம். நமது பண்பாட்டின் ஆகச் சிறந்த மனிதாபிமான கூறுகளையும், நமது பெருமைமிகு தமிழ் இலக்கிய கூறுகளையும் கற்றுத்தேறிட இடைவிடாது முயற்சிப்போம்.
இந்திய விடுதலைப் போரின் காவிய மரபில்வந்தவர்கள் என்ற பெருமிதம்-பரந்து விரிந்த இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் பகுதி என்ற பார்வை எம்மை இயக்குகிறது என்பதறிவோம். இந்திய தொழிலாளர்களின் ஒன்றுபட்ட அனைத்து போராட்டங்களும் எமக்கு அந்நியமல்ல.
விடுதலைப் போராட்டக் காலத்திலேயே தொழிலாளி கையேந்தும் பிச்சக்காரனல்ல-செல்வ வளமெல்லாம்உருவாக்கும் படைப்பாளி என்ற முழக்கம் தந்த தலைமை நமது தலைமை. நாடு துண்டாடப்பட்டபோது சிதறிக் கிடந்த தபால்- தந்தி தொழிலாளர்களை ஒன்றுபடுத்திய பாரம்பரியம் நமதென்பறிவோம்.
பொதுத்துறை என்ற கம்பெனிமுறை திணிக்கப்பட்டபோது அரசாங்க ஊழியரின் அவரது குடும்பத்தின் வாழ்நாள் பாதுகாப்பான பென்சனை காத்துக் கொடுத்த தலைமை நமது தலைமை என்பதில் நாம் பெரு நிறைவு அடையமுடியும்.
அரபு வசந்தம், வால்ஸ்டீரிட் முற்றுகை போன்றவை மாபெரும் உலக எழுச்சிகளாக வந்துள்ளன. பிப் 28 இந்திய உழைக்கும் மக்கள் போராட்டம் உலகின் மாபெரும் வேலைநிறுத்தம் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளது.
வளர்ந்த நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, அய்ரோப்பிய நாட்டு பொருளாதாரங்கள் பெரும் நெருக்கடிகளை அந்நாடுகளில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் பரவ செய்துள்ளன. பகாசூர கார்ப்பரேட் கம்பெனிகளின் சுரண்டலை எதிர்த்து We are 99% போராட்டங்கள் பெரும் கிளர்ச்சிகளாக எழுந்துள்ளன.
இந்தியாவில் நிதி மூலதன நவீன தாராளமயம் வேகம் பெற்றுள்ளது. விலைஉயர்வு, உணவு பாதுகாப்பு, தேசிய ஆதாரங்கள் காப்பு, பெருகிவரும் காண்ட்ராக்ட் மயம், எங்கெங்கு காணிணும் ஊழல் போன்ற அம்சங்கள் தொடர் போராட்டங்களை நோக்கி மக்களை தள்ளியுள்ளன.
டெலிகாம் தாராளமயத்தின் உச்சம் தொட்டுள்ளது. தனியாரின் வேகம் முதலீடு, விரிவாக்கம், லாப வேட்டை, இந்திய இளைஞர்களை தீவிரமாக சுரண்டடுவது போன்றவற்றில் முனைப்பாகியுள்ளது.. பொதுத்துறை இவ்வேகத்திற்கு ஈடு கொடுக்கவேண்டும் என வற்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பில் வளர்ச்சிக்கேற்ற வேலைவாய்ப்பு என்பது நிகழ்ச்சிநிரலில் கூட ஏறவில்லை. காண்ட்ராக்ட் பெயரில் தொழிலாளர் சுரண்டலும், ஊழலும் பெருகி உள்ளன.
டெலிகாம் பொதுத்துறை தொழிலாளர்கள் நிச்சயமற்ற எதிர்காலம் என்ற உளவியல் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தொழிற்சங்கங்கள் பெருமளவு உடைவுகளுக்கு உள்ளாகி கட்சிவாரி தொழிற்சங்கம் நோக்கிப் போகத் துவங்கியுள்ளன. குறிக்கோளற்ற கொள்கையற்ற உடைவுகளால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருபெரும் சங்கங்களின் துருவ நடவடிக்கைகள் என்ற போக்கு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த செயல்பாடாக அமையவில்லை. தொழிற்சங்கத்தின் மீதான நம்பிக்கை மங்கத் துவங்கியுள்ளது என்பதுதான் எந்த இயக்கத்திலும் வீழ்ச்சிக்கான அறிகுறி..
தொழிற்சங்கத்திற்குள்ளும் தொழிற்சங்கங்கள் மத்தியிலும் ஒற்றுமை கட்டுவது வெறும் தந்திர உபாயமல்ல.அது வாழ்வின் தேவை. சொந்த வர்க்கம் மத்தியில் எழும் வெறுப்புகள் வர்க்கப் போராட்டங்களை ஒத்திப் போடத்தான் பயன்படும். தொழிலாளி வர்க்கம் தனக்குள் ஒதுக்கிவைத்து சுகம் காணும் அபார்த்தியிசத்தை அனுசரிக்க கூடாது.
நவீன தாராளமயத்திற்கெதிரான போராட்டத்திற்கு வேண்டிய உருக்கு போன்ற ஒற்றுமையை கட்டாமல் டெலிகாமில் போராட்டங்கள் வெற்றி பெறாது. நமது விவாதங்கள் கூட ஆக உயர்ந்த நெறிகளில் தோழமை பூர்வமாக நடைபெறவேண்டும். தொழிலாளிவர்க்கம் தனக்குள் எதிரியை தேடுவதிலேயே அதிக காலம் செலவழித்துவிட்டது. எதிரி எப்பொழுதாவது உள்ளே இருக்கலாம். எதிரி வர்க்கம் மாயரூபம் ஏதுமின்றி வெளியே இருக்கிறது. சங்கத்திற்குள்ளும் சங்கங்களுக்கு மத்தியிலும் ஒற்றுமை பலப்பட, இயக்கம் தீவிரமடைய மேதினம் வழிகாட்டட்டும்.
28-4-12