வாழ்வியலின் நடப்பியல் கவிதை.
“என் ரத்தங்களே
அவர்கள்
என்னை எதிரியாக கொண்டாடிய போதும்
இவன் எறும்புகளுக்குக் கூட
குறிவைத்ததில்லை”
ஒரு பொழுதும் சம்மதிக்காத
பாம்பு வெளிக்குச் செல்லும் என் தனிமை
கனத்து வருகிற இருள்
மிடறுகளை நக்கி
என்னை கவ்விக் கிடக்கிற காற்று
ஆகாய அளவில் தேடலும் வேட்கையுமாக
நுரைத்துப் பொஙகிய கடன்
இப்படித்தான் அலைந்து கொண்டிருக்கிறது நான்.
நான்
உன்மொழி பேசுகிறேன் என்றும்
அவன் இன்னொறு மொழி
பேசுகிறான் என்றும்
நம் முனைப்பின் சாலையை
நீட்டிக் கொண்டு
எதிரெதிர் திசைகளில் நடக்கயில்
ஒவ்வொறு முறையும்
இழப்புக்கள் மேலதிகமாகலாம்.
யாரும் இல்லாத
அரச மரத்தில் காவலுக்கு நின்;றன
சில வெளவால்கள்.
வறண்டு கிடக்கும் ஆற்றில்
கரை புரண்டோடும்
வெயில் வெள்ளம்.
மேலே பறந்து கொண்டிருக்கும்
தனித்தொரு பறவை
வானில் ஒரு
குளிர்மேகம் தேடி.
52
செடியின்
ஒரு மலர்
உதிரும்.
ஒரு மொட்டு
அவிழும்.
செடி செடியாய் இருக்கும்.
53
ஒரு
கோவணம் கூட இல்லை.
அண்ணாந்து
ஆகாயம் போர்த்திக்
கொள்ளும்
அந்தக் குழந்தை.
54
நேற்றிரவில்
எனக்குப் பெய்த மழை
எல்லோருக்கும் பெய்யவில்லை.
என் கனவில்
மழை.
55
ஒற்றைப் பனைத்தூரிகையும்
ஓவியமும்
ஒன்றோ?
56
நடுஜாமத்தில் தனிமையில்
செல்லும்
சந்திரனைப் பார்த்து
சங்கிலியில் கட்டிய நாய்
குரைத்தே ’பிடித்து’ விடலாமென்று
குரைத்துத் தீர்க்கும்.
57
ஐஸ்கிரீமாய்
என் காலம் கரையும்.
கடைசியில் மிஞ்சும்
பெயரழிந்து ஒரு
குச்சி.
58
தீராது மழை
கடைசி
மழைச்சொட்டு
தீராத வரை.
59
செருப்பு தைப்பவன்
சுடும் வெயிலில்
குடை நிழலில்
செருப்பு தைப்பான்
சூரியனுக்கு.
60
வெயில் மேல்
வெயில் எரியும்.
’வெளி’ ஏரியில்
நிரம்பி வழியும்
வெப்பம்.
தகித்து மிதக்கும்
தாங்காது உலகம்.
61
காலம் போடும்
கடைசிச் சித்திரம்.
காடு போன பறவை
கூடு திரும்பவில்லை.
62
கடல் மணலில்
செத்துக் கிடக்கும்
இராட்சத மீன்
கடலுக்குள் புகுந்ததும்
துள்ளிக் குதிக்கும்.
கட்டுமரம் தான்.
63
காற்றில்
கலந்திருக்கும் இராகத்தை
ஒரு பறவையின் அலகு
பிரித்துப் பிரித்துப் பாட
’கீச் கீச்’சென்று கேட்கும்.
64
கண் துயிலா
இரவின்
முடிவில்
கனவாய்ப்
புலரும்
காலை.
65
கடலின்
சப்தத்தில்
என்
நிசப்தம்
கூடும்.
66
கத்திரி வெயில்.
என்
‘நிழல்’
எரியும்.
என் ’பட்டை’
உரியும்.
67
ஓசைப்படாமல்
காலப் பாம்பு
உரித்துப் போடும்
என் ’சட்டையை’
ஒவ்வொரு நாளும்.
68
மண்ணில்
முத்து வைக்கும்.
மழைத் துளிகள்.
அதற்குள்
மனசுக்குள்
அடிக்கும்
இடி, மின்னல்
மழை.
69
பூங்காவில்
அது ஒன்று தான்
பட்டமரம்.
வேறென்ன செய்யும்?
வெறுங் கைகளை விரித்துப்
புலம்பும்.
70
கண்ணாடி முன்
என்
உடலைப் பார்ப்பது
நான்.
என்
எலும்புக் கூட்டைப்
பார்ப்பது
காலம்.
71
சின்னச் சின்ன
எறும்புகள்
என்னை
எங்கே
இழுத்துச்
செல்கின்றன?
72
மனிதனின்
கிஞ்சிற்றும் ’ஈரமேயில்லாத’
ஒரு
கண்ணீர்த் துளி
மண்ணில் விழாது உறைந்து
தூக்குக் கயிறாய்த்
தொங்கும்.
73
வானவில்லைக்
கண்கள்
’உடைக்காமல்’
இரசித்தேன்.
74
உனக்கும் தெரியாமல்
உன் ’பொட்டலம்’
அவிழும்.
ஜாக்கிரதை.
உண்மையாய் இரு
75
குடையின்
மேல்
என்
கூடவே வரும்
நிழல் தந்து
வெயில்.
76
துழாவினேன்
துழாவினேன்
அறையுள்.
என்னை விட்டால்
எல்லாம் மிச்சம்.
77
காணாத
’இந்த’ மூச்சிலா
’இந்தப் பிரேதம்’
கனக்காது காண்பதாய்
’என்’ தேகமென்று
என் காலம் செல்லும்?
78
கடல் பக்கம்
கடற்கரை மணல்
சுடும்.
கடற்கரை மணலில் சுடும்
என்
காலடிச் சூரியனைக்
கடலில் கரைப்பேன்.
79
இறக்கைகளின் கீழ்
தங்கியிருக்கும்
’கொஞ்சம் ஆகாயம்’
மேல்
தங்கியிருக்கும்
பறவை
பறக்காத சமயங்களில்.
80
குழந்தைகளே!
படியுங்கள்; படியுங்கள்.
இறக்கைகள் இழந்த
பட்டாம் பூச்சிகள்
பறப்பதைக்
கனவு காணும் காலம் இது.
81
பலியிடப்பட்ட
ஆட்டுத் தலையின்
இறந்த கண்கள்
ஆயிரம் கேள்விகள்
கேட்கும்
’கிடா’ கேட்ட
கடவுளைத் தேடி.
82
தவற விட்டேன்
தனிமையில்
என்னை.
கண்ணாடியாய்
உடைந்து கிடப்பேன்.
83
வெளியின் ஜன்னலிலா?
வீட்டின் ஜன்னலிலா?
காகம்
ஜன்னலில் அமர்ந்து
கத்திக் கொண்டே இருக்கும்.
84
எந்த மேகத்திற்கு
என்னை அழைத்துச் செல்லும்
என் வசமில்லாது
அலையும் மனம்?
85
’அறுபது வருடக் குளம்’
என்று
என்னுள் எட்டிப் பார்த்தால்
வறண்டு கிடப்பேன்
நான்.
86
எதை விட்டேன்
எதை விட?
87
பறவை
பறந்து
விட்டுச் சென்ற ஆகாயம்
ஒரு விநாடி
வெறிச்சென்று தானிருக்கும்.
88
ஒரு
நட்சத்திரத்தைச் சுட்டும்
என் விரல்.
எந்த நட்சத்திரம் என்று
எல்லா நட்சத்திரங்களும்
என் விரல் சேரும்.
89
பயமாய் இருக்கும்
புலி.
பயமாய் இருக்காது
காடு.
90
கடைசியில் தெரியும்
மனிதன்
’நடக்கும் மரமென்று’.
’உயிர்ப்’ பறவை
பறந்து போக
உடல் விழும் மரம் போல.
91
திரிந்து பார்.
சேர்த்த சுமை
தெரியும்.
92
அமைதி கெட்ட
உலகம்.
அலைந்து திரியும்
ஊரில் நாய்கள்.
93
இந்தக் கரையிலேயே
இருப்பேன்.
என்னுள்
வறண்டிருக்கும் ஒரு ஆறு.
எப்போது வெள்ளம் வரும்
அந்தக் கரைக்கு நீந்த.
94
ஒரு விநாடியில்
ஒரு விநாடியில் தான்
ஓடிக் கொண்டிருப்பேன்.
எப்படி
எனக்கு நரைத்தது?
95
ஐந்து நிமிடம்
பெய்த மழையில்
எத்தனை மழைத்துளிகள்?
யோசிக்காமல்
நனைந்தால் நல்லது.
96
எது பூக்கும்?
எத்தனை பூக்கும்?
எது உதிரும்?
எத்தனை உதிரும்?
செடிக்கே கவலையில்லை..
தோட்டக்காரனுக்கு
ஏன் கவலை?
97
மனம் திறப்பது
ஒரு விநாடி கூட இல்லை.
கொடுத்து விடு
அதற்குள்.
98
மரம் நிம்மதியாயிருக்கும்
இலைகளையெல்லாம்
உதிர்த்து விட்டு.
என் மனம் வெறிக்கும்
அதைப் பார்த்து.
99
நிலாவுக்கு
நிலா மட்டும் தான்.
என்னைப் போல்
அனாதையா
நிலா?
100
புத்தர் குதிரையல்ல
நீ சவாரி செய்ய.
நீ தான் குதிரை.
குதிரை தான் புத்தர்.
courtesy thinnai
தோழர்க்கு... கவிதைகளுக்கு தலைப்பாய் கொடுக்கப்பட்டது எண்கள் அல்ல வேகம்காட்டும் கருவியின் முள்ளின் நுனி...அனுமதியில்லாது.. சுட்டுவிட்டேன்.. என் vijaypakkam.blogspot.com ல் பிரசுரிக்க...
ReplyDeleteஅன்பன்..
விஜய் ஆரோகயராஜ்-குடந்தை