அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Monday, September 17, 2012

Friday, September 14, 2012


சில்லறை வர்த்தகத்தில் 51 % அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு

First Published : 15 Sep 2012 01:51:41 AM IST
Last Updated : 15 Sep 2012 02:38:13 AM IST

புது தில்லி, செப். 14: சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு உள்நாட்டில் பலத்த எதிர்ப்பு உள்ள நிலையில் மத்திய அரசு அதிரடியாக இந்த முடிவை அறிவித்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய புரட்சியாக இது கருதப்படுகிறது. எனினும் நாடு முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
விமானப் போக்குவரத்து துறை: இவை தவிர தகவல் ஒளிபரப்புத் துறையில் 49 சதவீதமாக உள்ள நேரடி அன்னிய முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்தவும், உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 49 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவை தவிர மின் துறையிலும் 49 சதவீத அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இதில் 26 சதவீதம் நேரடி அன்னிய முதலீடாகவும், 23 சதவீதம் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் மூலமும் அனுமதிக்கப்படும்.
அடுத்த அதிர்ச்சி... மத்திய அரசின் இந்த முடிவு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் வழங்குவதில் கட்டுப்பாடு ஆகிய அறிவிப்புகள் மூலம் மத்திய அரசு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இப்போது அடுத்த கட்டமாக நாடு முழுவதும் உள்ள சிறு வணிகர்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது மத்திய அரசு.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டது. அப்போது கூட்டணிக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால் அப்போது முயற்சி கைவிடப்பட்டது.
விரும்பும் மாநிலங்கள் செயல்படுத்தலாம்: மத்திய அமைச்சரவையின் முடிவை தில்லியில் அறிவித்துப் பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, "சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்த விஷயத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நிலைப்பாட்டை மதிக்கிறோம். தனது மாநிலத்தில் அதனை செயல்படுத்துவதா அல்லது வேண்டாமா என்பதை அவர் முடிவு செய்துகொள்ளலாம். அதே நேரத்தில் இதில் விருப்பமுள்ள மாநிலங்களுக்கும் அவரைப் போலவே உரிமைகள் உண்டு.
பல இலச்சினை (மல்டி பிராண்ட்) சில்லறை வர்த்தகத்தில் குறைந்தபட்சமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.550 கோடி) நேரடி அன்னிய முதலீடாக அனுமதிக்கப்படும். இவற்றில் பாதியளவு கிராமப்பகுதிகளில் சேமிப்பு கிடங்குகள், குடோன்கள் அமைக்க பயன்படும்.
நிபந்தனைகள்: குறைந்தபட்சம் 10 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட நகரில்தான் பெரிய அளவிலான சில்லறை விற்பனைக் கடைகள் அனுமதிக்கப்படும். மலைப் பகுதி நகரங்களில் இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
விமானத்துறையில் ஏற்கெனவே 49 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்போது உள்நாட்டு விமானப் போக்குவரத்திலும் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம் கிங்பிஷர், ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிதிச்சிக்கலில் சிக்கியுள்ள நிறுவனங்கள் பொருத்தமான வெளிநாட்டு நிறுவனங்களை கூட்டு சேர்த்துக் கொள்ள முடியும்.
மக்கள் நலனுக்காக... இது கடந்த நவம்பரிலேயே எடுக்கப்பட்ட முடிவுதான். அதனை நாங்கள் திரும்பப் பெறவில்லை. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை விரும்பாத மாநிலங்கள் அதனை அமல்படுத்தத் தேவையில்லை. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
பாஜக மீது குற்றச்சாட்டு: தங்கள் கட்சியின் சித்தாந்தத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதனை எதிர்க்கின்றனர். ஆனால் பாஜக இதனை வைத்து அரசியல் நடத்துகிறது. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர்.
தில்லி, ஜம்மு-காஷ்மீர், அசாம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரகண்ட், ஹரியாணா, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் இதனை வரவேற்கின்றன. பிகார், கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா ஆகிய மாநிலங்களும் ஆர்வமாகவே உள்ளன என்று ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
"வேலைவாய்ப்பு, வளர்ச்சிக்கு உதவும்'
சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய நேரடி முதலீடு செய்ய அனுமதி தரும் முடிவானது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் உதவும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.
பொருளாதார வளர்ச்சியை முன்வைத்து, அமைச்சரவை பல தீர்மானங்களை எடுத்துள்ளது. கடினமான தருணத்தில் நாட்டின் நலன் கருதி அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், முதலீடு செய்ய இந்தியா ஒரு சிறந்த நாடு என்ற நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.